Monday, 16 March 2020

திருமூலர்

மாற்றான் உருவில் ஒளியாய் நின்று
திணறும் உலகை திசைகொண்டமைத்தாய்
உணர்வால் அடைந்த ஞானம் முதலாய்
யாவும் அளித்த திருமூலவரே!

அழியும் உலகை மதியால் உணர்ந்து
எழுத்தில் பாதிக்க உலகை நுகர்ந்தாய்
முனியாய்த்திகழ்ந்தாய் ஈசன் இசையால்
தனியாய்த்திரிந்தாய் தரைமீதினிலே!

உமையாள் உடனின்று பாங்காய் உரைக்க
சுமையோ வாழ்வது புவிமீதினிலே
இமைபோல் காக்கும் தாயவள் அருள
சமைப்போம் வளம்யாவையும் நாம் இனியே

ஈசன் குருவாய் துணை நின்றருள
ஆசான் அவனன்றி வேறொருளரோ
நாடும் அவனை உயிரும் உளவும்
தேடும் ஞானம் முழுமைப்பெறவே



Image result for thrumoolar

Wednesday, 27 February 2019

அடிமைத்தனம்


சங்கிலியால் கட்டப்பட்டோம்,
பிணை பட்டகைதிகள் போல் நாங்கள்.
சிங்கமென காட்டை ஆள விழைந்தோம்
துண்டமாய் வெட்டப்பட்டோம்,





















ஆடித்திறிய ஏங்கித்தவித்தோம்,
ஆயினும், ஆட்டிப் படைக்கப் பட்டோம்.
தேடி உணர்ந்த ஞானம் வேண்டினோம்
வாட்டி வதைக்கப்பட்டோம்.

வேறில்லா மரங்களானோம்
விரும்பா வாழ்வு வேம்பாய் கசந்திட
உருமாறா ஊமைகள் பேசுவதெங்கே?
இரும்பால்  தைக்கப்பட்டோம்!

போதும் இந்த அவல நிலை!
திறந்தது மனம்,பிறந்தததொரு கேள்வி
நம்மைக் கட்டுண்டது இச்சங்கிலியா?
தெளிந்தது மனம் விரிந்தது வானம்...

                                                         - இப்படிக்கு ஊஞ்சல்


Sunday, 14 October 2018

இன்றைய ஆத்திச்சூடி


அடுத்ததை விடுத்தவன் எடுத்தது விளங்காது

ஆவினம் காப்பது வானினும் நன்று

இன்றை நுகர்ந்தால் நின்றதும் நகரும்

ஈன்றவை இழப்பின் சான்றவை இகழும்

உள்ளதை பகிர்ந்தால் நல்லவை நிகழும்

ஊக்கம் அழிந்தால் ஆக்கம் ஒடுங்கும்

எட்டா கனியை விட்டால் நன்று

ஏற்றம் வரினும் மாற்றம் கொள்ளீர்

ஐயம் கொண்டால் வையம் சுருங்கும்

ஒன்றை பற்றின் நன்றே நிகழும்

ஓர்மை விடுத்தின் நேர்மை விலகும்

ஔடதம் நீங்க மௌனம் நாடு

Wednesday, 23 July 2014

மௌனம் என்தன் வழியாகும்

கூர் வாள் என்தன் நாவானால்,
கனைகள் என்தன் சொல்லாகும்.
ஆன்பே என்தன் மூச்சானால்,
மௌனம் என்தன் வழியாகும்!

போர் வாள் என்தன் வாக்கானால்,
போரே  என்தன் வாழ்வாகும்.
கனிவே என்தன் நோக்கானால்,
மௌனம் என்தன் வழியாகும்!

மிரட்டல் என்தன் மொழியானால்,
மன்றம் என்தன் உலகாகும்.
நேசம் என்தன் நினைவானால்,
மௌனம் என்தன் வழியாகும்!


Thursday, 20 June 2013

இயற்கையின் சீற்றம்

நிலவை கொஞ்சம் கையில்பிடித்து
நீண்டுகிடக்கும் கடலில் கரைத்தேன்.
கடல் 'அலை'யத்தொடங்கியது.

காற்றை கையிலேந்தி  அடர்ந்து விரிந்த
காட்டில் கலந்தேன்,
மூங்கில்பாடத்தொடங்கியது.

நெருப்பைக் குழைத்து உருண்டை செய்து
பந்தாய் எறிந்தேன்.
வானில் சென்று ஆதவனாய் ஒளி வீசியது.

விதையை மட்டும் வித்தாய்க் கொண்டு
நிலத்தில் விதைத்தேன் பசியைத் தீர்க்கும்
பசுமை, பூவாய் மலர்ந்தது.

 கடவுளாய் என்னை சிலையில் இறக்கி சிந்திக்க
ஆரம்பித்தான் மனிதன் எனக்கு வடிவம் கொடுத்து
என் படைப்புக்களை வடிவிழக்கச் செய்தான்

வடிவம் கொடுக்க  மீண்டும் எழுவேன் நீங்கள் வணங்கும்
கடவுளாய் அல்ல
உங்கள் சக்தியை அடக்கும் அவதாரமாய்!


Sunday, 9 June 2013

வாழ்க்கை என்பது வினையெச்சம்

வாழ்க்கை என்பது வினையெச்சம்
வாழ்ந்தோம் வாழ்கிறோம் வாழுவோம்
வாழ்க்கை என்பது வினையெச்சம்
முன் ஜென்ம வினையெச்சமே இப்பிறவி
வாழ்க்கை என்பது வினையெச்சம்
வாழ்ந்து பாருங்கள் தீரும் அச்சம்
வாழ்க்கை என்பது வினையெச்சம்
சொல் அன்றி செயலே இதில் மிச்சம்
வாழ்க்கை என்பது வினையெச்சம்
முற்றும் உணர்ந்தால் சாவும் இனி துச்சம்

Sunday, 9 December 2012

மண்ணின் மணம்

நெஞ்சிருந்தும் நினையாதவராய்

விழிஇருந்தும் நோக்காதவராய்

வாழும் மனிதர் கூட்டம்

உலக அரங்கில் ஒரு சிலரின் ஆட்டம்

செவி இருந்தும் கேளாதவராய்

உயரிருந்தும் நடைபிணமாய்

வாடும் பலரது தோற்றம்

இவர் உழைப்பில் சிலருக்கு ஏற்றம்

ஏழ்மைக்கு மேடையிட்டு அதில் பட்டினியை

அரங்கேற்றும் அவலங்களே இங்கு நடைமுறையாயின

சிலர் உருவற்று வலுவற்று வாழ்வற்று வாழும் இந்த

மண்ணின் மணம் - சிந்தியுங்கள் ஒரு கணம் !