Thursday, 20 June 2013

இயற்கையின் சீற்றம்

நிலவை கொஞ்சம் கையில்பிடித்து
நீண்டுகிடக்கும் கடலில் கரைத்தேன்.
கடல் 'அலை'யத்தொடங்கியது.

காற்றை கையிலேந்தி  அடர்ந்து விரிந்த
காட்டில் கலந்தேன்,
மூங்கில்பாடத்தொடங்கியது.

நெருப்பைக் குழைத்து உருண்டை செய்து
பந்தாய் எறிந்தேன்.
வானில் சென்று ஆதவனாய் ஒளி வீசியது.

விதையை மட்டும் வித்தாய்க் கொண்டு
நிலத்தில் விதைத்தேன் பசியைத் தீர்க்கும்
பசுமை, பூவாய் மலர்ந்தது.

 கடவுளாய் என்னை சிலையில் இறக்கி சிந்திக்க
ஆரம்பித்தான் மனிதன் எனக்கு வடிவம் கொடுத்து
என் படைப்புக்களை வடிவிழக்கச் செய்தான்

வடிவம் கொடுக்க  மீண்டும் எழுவேன் நீங்கள் வணங்கும்
கடவுளாய் அல்ல
உங்கள் சக்தியை அடக்கும் அவதாரமாய்!


Sunday, 9 June 2013

வாழ்க்கை என்பது வினையெச்சம்

வாழ்க்கை என்பது வினையெச்சம்
வாழ்ந்தோம் வாழ்கிறோம் வாழுவோம்
வாழ்க்கை என்பது வினையெச்சம்
முன் ஜென்ம வினையெச்சமே இப்பிறவி
வாழ்க்கை என்பது வினையெச்சம்
வாழ்ந்து பாருங்கள் தீரும் அச்சம்
வாழ்க்கை என்பது வினையெச்சம்
சொல் அன்றி செயலே இதில் மிச்சம்
வாழ்க்கை என்பது வினையெச்சம்
முற்றும் உணர்ந்தால் சாவும் இனி துச்சம்